லெப். சீலன் அண்ணாவின் நினைவில் - Remembering Lt. Charles Antony Seelan

227 Views
Cholan
Cholan
17 Jul 2023

⁣இறுதி மூச்சு வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.

சுற்றிலும் குவிந்து நிற்கும் சிங்களக் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொடர்ந்து சடசடக்கிறது.!

ஆனால் கூலிப்படையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.

இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.

உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதறக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும்! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன் கட்டளையிடுகிறான்.

படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.

பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.

சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?

ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.

“என்னைச் சுடடா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.

நெஞ்சில் வழியும் ரத்தம்;
முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தள்ளாடியவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.

லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.

கண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.

அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகான – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.

“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் ரத்த சாட்சிகள்.

(நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூலிலிருந்து…!சூரியப் புதல்வர்கள்)

Show more

Follow us on Instagram and Twitter: @Eelam_TV
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.
0 Comments Sort By

No comments found

Up next