மேஜர் சுவர்ணன் - ராதா வான்காப்பு படையணி - Major Swarnan - Radha Air Defence Force

233 Views
தமிழன்
தமிழன்
31 May 2024

⁣பாடசாலை நட்பு மீண்டும் இயக்க நட்பாகி…

1987 இல் இந்திய இராணுவத்தாலும்,
ஒட்டுக்குழுவாலும் எமது குடும்பம் இலக்குவைக்கப்பட்டபோது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்வொன்றிற்குள் தள்ளப்பட்டோம்.
வலிகாமத்திலிருந்து வடமராட்சிக்கு வந்து சேர்ந்தபோது கூடவே கல்வியும் தடைப்பட்டிருந்தது.

தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் தரம்
ஆறில் கல்வியைத் தொடர்ந்தபோது நண்பனானவன் ஜெயசீலன்.
தூரத்து குடும்ப உறவாக இருந்தபோதும் பாடசாலைதான் எமது நட்பின் உருவாக்கத்திற்கு காரணமாய் அமைந்தது.

நான் இயக்கத்தில் இணைந்தபின்
பல வருடங்கள் அவனைச் சந்திக்கவில்லை.விடுமுறையில் வீடுசென்று அவனது வீட்டிற்கு சென்றபோதுதான் தெரியும் அவனும் இயக்கத்தில் இணைந்துவிட்டான் என்பது. தாக்குதல் நடவடிக்கைகளின்போது சந்திக்கும் படையணிப் போராளிகளிடம் விசாரித்து தேடிப்பார்த்தேன்.
ஆனாலும் அவன் பணியாற்றிய துறை அல்லது படையணி எதுவென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. சந்திக்கும் வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை.

1999 ஆனையிறவு பெருந்தள அழிப்புத் தாக்குதலுக்காக எமது படகுத்தொகுதிகள் தயாரானபோது பூநகரி கடற்கரையின் வெளியில் விமான எதிர்ப்பு ஏவுகணையுடன் (missile) எமது படகுகளுக்கான பாதுகாப்புக்காக மூவர் கொண்ட விமான எதிர்ப்பு அணியொன்று விடப்பட்டிருந்தது.

அதன் முன்னணி வீரனாக அங்கு வந்திருந்தான் ஜெயசீலன்.
அது எனக்கு உடன் தெரிந்திருக்கவில்லை.
நானும் இப்படகுத்தொகுதியில் நிற்பதுபற்றி அவனும் அறிந்திருக்கவில்லை.
ஒரு வாரம் உருண்டோடிவிட்டிருந்தது.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் ஓரிருவாரம் கடந்து கரைக்குச்சென்றபோது,
எமக்கு வந்த உலர் உணவில் ஒரு சிறுபொதியை விமான எதிர்ப்பு அணியினருக்கும் கொடுக்கலாம் எனும் பரிவோடு அவர்களின் கூடாரத்திற்குச் சென்றிருந்தோம்.
அது ஒரு மாலைப்பொழுது கூடாரத்திலிருந்து போராளிகள் வெளிவந்து எம்மை அழைத்தனர்.

உள்ளே சுவர்ணன் ஏவுகணைக்கு எண்ணெய் தடவிச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தான். குத்துவரிச்சீருடையில் ஜெயசீலன் சுவர்ணனாக மாறி நெடுத்து,
வளர்ந்து,நிமிர்ந்து நின்றிருந்தான்.
பாடசாலை நட்பு மீண்டும் இயக்கத்தில் கைகோர்க்கத் தொடங்கியது.

நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். விட்டுப்பிரிய மனம் மறுத்தபோது தலைவரின் அந்த உன்னத அறிவுறுத்தலே ஞாபகத்துக்கு வந்தது.

‘தோழமைக்கு உரிமைகொடு
கடமை நேர்த்தில் தவிர்த்துக்கொள்’

போராளிகளின் ஆழமான நட்பை உணர்ந்த தலைவர் அதற்காகவே இந்த வார்த்தையை போராளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஓரிரு வாரமே
போராட்ட வாழ்க்கையிலும் அந்த நட்பு நீடிக்கும் என நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனாலும் அடிக்கடி வோக்கியிலும்,நேரடியாகவும் எமது சந்திப்புகள் தொடர்ந்திருந்தபோதும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் அவனுக்கான முக்கிய பணியொன்று வழங்கப்பட்டிருந்தது.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான சாவகச்சேரிப் பகுதிக்குள் சென்று,அங்கே தாழப்பறந்து எமது முன்னரங்க நிலைகள் மீது திடீர் ரொக்கட் தாக்குதலை மேற்கொள்ளும்
Mi 24 தாக்குதல் உலங்குவானூர்தியை தாக்கி வீழ்த்துவதற்கான பெரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சுவர்ணனின் மூவர் குழு புறப்படத் தயாராகியது.
பத்திரமாக மூவர் கொண்ட அவனது அணியைத் தரையிறக்குவதற்காக எமது படகுகளைத் தயாராக்கி கச்சாய்ப் பகுதியில் தரையிறக்கிவிட்டுத் திரும்பினோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவன், தலைமையின் கட்டளைப்படி
Mi 24 தாக்குதல் உலங்குவானூர்தியை வெற்றிகரமாக சுட்டுவீழ்த்திவிட்டான்.
இராணுவம் திகைத்தது.புலிகள் எப்படி தமது உலங்குவானூர்தியை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து சுட்டுவீழ்த்தினார்கள் என படைத்தரப்பு குழப்பிப்போயிருந்தது.
சுவர்ணனின் அணி மீண்டும் எமது பகுதிநோக்கி நடக்கத்தொடங்கியது.

கரை மீண்டவன் தேசியத் தலைவரைச் சந்தித்தபோது சிறப்புப் பரிசாக பிஸ்டல் ஒன்றை பெற்றிருந்தான்.

புதிய போர் வியூகங்களுடன்,
தொழில்நுட்பரீதியான பல புதிய மாற்றங்களோடு வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகுகளில் கடும்பயிற்சிகள் தொடர்ந்தது. உயரக்கடலில் கடற்சமர்கள் உக்கிரம்பெற்றபோது
எமது நட்பு மீண்டும் முற்றாகவே அறுபட்டுப்போனது.

ஒருசில மாதங்கள் உருண்டோடிய பின்னர் சுவர்ணனின் வீரமரணச் செய்தியே 29/05/2000 இதேநாள் மாலைப்பொழுது
எனக்கு வந்துசேர்ந்தது.
#ராதா_வான்காப்பு_படையணி
#விமான_எதிர்ப்பு

Show more

0 Comments Sort By

No comments found

Up next